நூரினில் நூரான நூரே முஹம்மதியா
நுபுவத்தின் முத்திரையை முத்திடுவோம் வாருங்களேன்
கண்ணீரும் கரைந்தோட கண்மணியின் தர்பாரை
களிப்போடு காண்போமே அன்பான சகோதரியே!
                                                                                                                              ( நூருக்குள் )

முதலாம் வசந்தமாம் ரபீயுல் அவ்வலிலே
முழுமதியாய் தோன்றிய முத்திரை நபி யழகே
ரஹ்மானின் புண்ணிய நேசராய் வந்தீரே
ரஹ்மத்துலில் ஆலமீனாய் ஆலத்தில் அவதரித்தீர்
அங்கம் குளிர்ந்திட பங்கம் மறைந்திட
அலங்காரமாய் பிறந்தீர் அன்பான ஆன்றலரே!
                                                                                                                              ( நூருக்குள் )

உங்களை யாசித்தோர் ஆஷிக்காய் மனம்பெற்றோர்
உங்களை வெறுத்தோர்கள் வெதும்பியே போனார்கள்
மன்னரே மஹ்மூதே முஸ்தபா மா நபியே
மலர வைப்பீர் எங்களையும் ஆஷிக்கீன் கூட்டத்திலே
தாஜுல் முத்தகீனே தாஹவே தவப்பொருளே
தலையினில் கிரீடமாய் சூட்டிடுவேன் தங்களையே!
                                                                                                                              ( நூருக்குள் )

இறை நெருக்கம் கிடைத்திட்ட மிஃராஜின் நேரத்திலும்
இறை சமுகம் நம் தனையே நினைந்துருகிய நாயகமே
நரகத்தில் பெண்ணின்நிலை கண்டு மனம் வெதும்பி
நாவதை பேணிக்கொள் நவின்றீர்கள் நாயகமே
பெண்மகவே என் மகள்தான் காத்தீரே பெண்ணினத்தை
பெருமானே உங்கள் புகழ் பாடி மகிழ்திடுவோம்!
                                                                                                                              ( நூருக்குள் )

உயிர் பிரியும் உன்னத நேரத்திலும் எம்மானே
உம்மத்தை உயிர் மூச்சாய் கொண்டீர்கள் கோமானே!
எம் உயிர்ப் பிரியும் முன் உம் முகத்தை யாம் காண
மடியினில் பிச்சையாய் கேட்கிறோம் கோமானே!
தட்டாமல் தருவீரே ஹோஜா முஹம்மதரே
விரட்டாமல் ஏற்பீரே ஏகோனின் இரசூலே!
                                                                                                                              ( நூருக்குள் )

அனலாய் கொதித்திடும் மஹ்ஷரின் நேரத்திலும்
அரவணைப்பீர் லிவாவுல் ஹம்தினில் அண்ணலரே!
தாகித்தால் நாவரண்டு தவித்திடும் தருணத்திலே
தங்க நிகர் ஹவ்ழினில் புணல் தருவீர் ஆருயிரே!
மஹ்மூ தெனும் தலத்தில் மன்னான் முன் சிரம் பணிந்து
மாண்பான மன்றாட்டம் புரிந்திடுவீர் கோமானே!
                                                                                                                              ( நூருக்குள் )

ஸிராத்தென்னும் பாலமதை மின்னலென யான் கடக்க
சிறப்பான முந்தானையைத் தருவீர்கள் கோமானே
அர்ஸினை அலங்கரிக்கும் அல்லாஹ்வின் ஜோதி தனை
அகம் குளிர முகம் மலர பார்த்திடனும் பார்த்திபரே!
அல்லாஹ் நீ உவந்திடும் எம் உயிரான உத்தமரின்
அருகினில் யாம் இருக்க வரம் தருவாய் வல்லவனே!
                                                                                                                              ( நூருக்குள் )

ஷரீஅத்தின் நெறிமுறையை சருகாமல் நிறுத்திய எம்
ஸாதாத் தாம் குருநாதர் முஹ்யித்தீன் ஆண்டகையின்
திருப்பாதம் எம்தோளில் சுமந்திட ஆசிக்கிறோம்
வலிமார்கள் கூட்டதில் சேர்த்திட யாசிக்கிறோம்
இகபர வாழ்வெல்லாம் இறையன்பும் நபியன்பும்
இறைஞ்சியே கேட்கின்றோம் தந்திடுவாய் ரஹ்மானே!
                                                                                                                              ( நூருக்குள் )

Home | Qaseedas | Poems | Articles | Events | About Us | Recommended Sites | Sitemap
© 2020 kayal-islam.blogspot.com | All Rights Reserved.