காலை கதிர் ஒளி உதிப்பது போன்றே
கருத்தினில் இறை ஒளி உதிர்த்ததனால்
ஹாத்தம் நபிகள் ஹிஜ்ரத் எனும்
புனித பயணமே கொண்டார்கள்
பெருமான் நபிகள் சென்றார்கள்
கண்ணிய பயணம் எதற்காக
கணக்காய் வந்தது நமக்காக

அருமை அபூபக்கர் சித்தீக் ரழியல்லாஹூ அன்ஹூ
ஆத்மீக தோழரோடு அண்ணல் நபிகளும்
இன்முகத்தோடு இணைந்தே சென்றார்கள்
இருளை கடந்து இடர்பல சுமந்து
கண்ணிய பயணம் எதற்காக
கணக்காய் வந்தது நமக்காக

களைப்புடனே இரவு நேரம் நெருங்கும் போதிலே
களிப்புடனே தௌர் மலை குகை தன்னிலே
முனைப்புடன் இருவருமே துணிந்தே சென்றார்கள்
முட்புதர் படர்ந்த இடத்தினை கண்டார்கள்
கண்ணிய பயணம் எதற்காக
கணக்காய் வந்தது நமக்காக

நடந்து வந்த அயர்வினாலே நாதர் நபிகளும்
அருமை அபூபக்கர் மடியில் தூங்கினார்களே
விஷ ஜந்துகள் வாழும் பொந்துகள் அங்கே
அருகிருக்க அபூபக்கர் அஞ்சினார்களே
கண்ணிய பயணம் எதற்காக
கணக்காய் வந்தது நமக்காக

தான் அணிந்த சட்டையினை கிழித்தெடுத்தவரும்
தன்மையுடன் ஓட்டைகளை அடைத்திட்டார்களே
எஞ்சிய ஓட்டை ஒன்று மீதம் இருக்கவே
கால் பெரு விரலால் அதை மறைத்தார்களே
கண்ணிய பயணம் எதற்காக
கணக்காய் வந்தது நமக்காக

பெருமானார் வதனம் காண பேராவலாய்
பல நாட்கள் காத்திருந்த பாம்பு ஒன்று தான்
வழியின்றி பெரு விரலை தீண்டியதாலே
பெரும் விஷத்தால் உடல் முழுவதும் வியர்த்து போனதே
கண்ணிய பயணம் எதற்காக
கணக்காய் வந்தது நமக்காக

கண்ணயர்ந்து தூங்குகின்ற கண்மனி நபிகள்
எங்கே அவர்கள் விழித்திடுவார் என்று அஞ்சியே
உடல் முழுதும் விஷம் ஏறி வேதனை செய்ததால்
கண்ணீர் வடிந்ததே கருணை நபி மீது
கண்ணிய பயணம் எதற்காக
கணக்காய் வந்தது நமக்காக

இரஸூல் நபியவர்கள் விழித்தெழுந்தார்கள்
வினவியதால் நபியவர்கள் விஷயமறிந்தனர்
வல்லோன் அல்லாஹ்விடம் இருகரம் ஏந்தியே
வாஞ்சையுடன் துஆ இறைஞ்சிக் கேட்டனர்
கண்ணிய பயணம் எதற்காக
கணக்காய் வந்தது நமக்காக

உம்மி நபிகள் தங்க இதழின் உமிழ் நீரையும்
பெரு விரலில் தடவியதால் விஷம் இறங்கியது
நன்மை செய்த இறைவனுக்கு நன்றி கூறி
தொடர்ந்து பயணமானார்கள் மதீனா நோக்கியே
கண்ணிய பயணம் எதற்காக
கணக்காய் வந்தது நமக்காக

Home | Qaseedas | Poems | Articles | Events | About Us | Recommended Sites | Sitemap
© 2020 kayal-islam.blogspot.com | All Rights Reserved.